ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. படம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த புதிய அப்டேட்டை, படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பாராயன் வெளியிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தை கிராமம் சார்ந்த கதைக்களத்துடன் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசியுள்ளார். அதேபோல் மீனாவும், சதீஷும் தங்கள் காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளனர்.
படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக திலீப் சுப்பாராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்துடன் படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. சில உதிரி மற்றும் பேட்ச் வொர்க்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. டி.இமான் இசையமைத்து வரும் அண்ணாத்தயை தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.