ரஜினி அரசியல்: ரகசியமும் உண்மையும்!
‘அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தில், சரியாக வருவேன்’ என, பல ஆண்டுகளாக கூறி வந்த, நடிகர் ரஜினி, அடுத்த மாதம் கட்சி துவக்கப் போவதாக அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்பு தேதி, இம்மாதம், 31ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி துவக்குவதற்கான பணிகளை கவனிப்பதற்காக, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக, பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அர்ஜுனமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது தவிர, கட்சியின் கொள்கை, கொடி போன்றவற்றை வடிவமைக்கும் பணியில், வட மாநிலங்களில் பணியாற்றும், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழகத்தில் உள்ள ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கட்சியின் பெயரை, தேர்தல் கமிஷனில், பதிவு செய்யவும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தில், 21 பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.
ஏற்கனவே, 45 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில், முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியலை கைவசம் வைத்துள்ளனர். மேலும், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டுச் சாவடிகளில், முகவர்கள் நியமிக்கும் பணியை, விரைவாக முடிக்கும்படி, மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்ததும், அ.தி.மு.க., – தி.மு.க., – காங்கிரஸ் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. அந்த கட்சிகளில், கட்சி தலைமை மீது, அதிருப்தியில் உள்ளவர்களில் பலர், ரஜினி பக்கம் வர தயாராகி வருகின்றனர்;
ரஜினி தரப்பினருடன், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, மாற்று கட்சியில் உள்ள, முக்கிய பிரமுகர்களும் ரகசிய பேச்சு துவக்கியுள்ளனர். இதன் பின்னணியில், எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் பலர் உள்ளனர். சென்னை முன்னாள் மேயர், முன்னாள் துணை மேயர், ரஜினி பக்கம் செல்வது உறுதியாகி உள்ளது.
தற்போது, தனிக்கட்சி நடத்தி வரும், முன்னாள் எம்.பி.,யான கல்வியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைய உள்ளனர்.அ.தி.மு.க., அமைச்சரவையில், தற்போது அமைச்சர்களாக உள்ள, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர், புதிய அமைச்சர், முன்னாள் ராஜ்யசபா எம்.பி., மற்றும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஆகியோரிடமும், ரஜினி தரப்பில் பேச்சு நடந்துள்ளது.
தி.மு.க.,வில், பிரபல வழக்கறிஞர், தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள முன்னாள் அமைச்சர் உட்பட, பலரிடம் பேச்சு நடந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ‘சிட்டிங்’ எம்.பி., மற்றும் மாநில நிர்வாகிகள் சிலரும், ரஜினி தரப்புடன் பேசி வருகின்றனர்.இவர்கள் மட்டுமின்றி, தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களும், ரஜினி பக்கம் தாவ, ஆலோசித்து வருகின்றனர்.
புத்தாண்டில் ரஜினி கட்சி துவக்கியதும், இக்கட்சிகளில் இருந்து, பலர் அணி மாறுவர் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசியலில், வரும் புத்தாண்டு பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்கிறது, ரஜினி வட்டாரம்.