சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இமயமலையில் உள்ள பாபா குகைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் தன்னுடைய படங்கள் வெளியாகும் சமயத்தில் இமயமலை செல்வார். ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சமயத்தில் 8 ஆண்டுகள் இமயமலை செல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த காலா படத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்ட ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை சென்றார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பாக அக்டோபர் மாதம் இமயமலைக்குச் சென்றார்.
ஒரு வார காலம் திட்டமிட்ட அந்த பயணத்தை மூன்று நாட்களில் முடித்துகொண்டு சென்னை திரும்பினார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இமயமலைக்கு செல்லாமல் மூன்று ஆண்டுகள் தவிர்த்தார். இந்த நிலையில் இன்று காலை இமயமலை புறப்பட்டார். அங்கு ஒரு வார காலம் ரஜினிகாந்த் தங்குவார் என கூறப்படுகிறது. அவருடன் அவருக்கு நெருக்கமான சிலரும் செல்கின்றனர். ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகியுள்ள நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் இமயமலைக்கு செல்வதாகவும், கொரோனாவால் இத்தனை ஆண்டுகள் செல்ல முடியாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஜெயிலர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் நான் சொன்னால் நல்லா இருக்காது, நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றார்.