சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் அம்பத்தூர், முகப்பேர், பாடி, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 5 நிமிடம் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் பெய்த கனமழைக்கு ரயில் நிலைய மேற்கூரை சேதமடைந்தது. தண்டவாளத்திலும் மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராட்டிண கிணறு பகுதி வரை சாலையோர மரங்கள் மின் கம்பத்தின் மீது சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, போரூர், மதுரவாயில், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மாணவர்களும் பணிக்குச் செல்வோரும்  அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காரப்பட்டு, கல்லாவி, சிங்காரப்பேட்டை, அனுமன் தீர்த்தம், சாமல்பட்டி, கதவணி, வீரணகுப்பம் போன்ற இடங்களில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால்  வீரியம்பட்டி கூட்ரோடு அருகே ராமசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்தன. அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்திலும் பரவலாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியில் இருந்து 100 ஆண்டு பழமையான பூவரசம் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ, அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுனருக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி உறுதி அளித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here