மீண்டும் கன மழை!
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி நிவர் புயல் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் புரெவி புயல் உருவாகி தமிழகம் அருகே தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாகவும் தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.