கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடு உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

வருமானவரி சோதனை: தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார் வருமான வரித்துறையினருக்கு வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 26-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், ஆதரவாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் கோவையில் தி.மு.க. நிர்வாகி செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகம், கோவை ரேஸ்கோர்ஸ் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீடு உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது 5 நாட்கள் வரை நீடித்தது. சோதனையின் முடிவில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர். மேலும் கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்த செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்தை வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.

2-வது முறையாக சோதனை:

இந்த நிலையில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் மீண்டும் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கோவையில் 2-வது முறையாக செந்தில் கார்த்திகேயன் அலுவலகம் மற்றும் அரவிந்த் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

நேற்று காலை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் 5 வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அந்த அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி உள்ளே சென்றனர். தொடர்ந்து வருமான வரித்துறையினர் 2 குழுவாக பிரிந்து அங்கு இருந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியிலும், மற்ற இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த ஆவணங்களை ஓப்பீட்டு பார்க்கும் பணியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கட்டிட ஒப்பந்ததாரர் அலுவலகம்:

இதேபோல் கோவை சுங்கம் அருகே நாடார் வீதியில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் அருண் பிரசாத் என்பவரின் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஆவணங்கள், கணினியில் உள்ள தகவல்கள் உள்ளிட்டவற்றை சரி பார்த்தனர். துணை ராணுவத்தினர் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவரின் வீட்டில் 3 வருமான வரித்துறை அதிகாரிகளும், ராம் நகரில் உள்ள கண்ணப்பன் என்பவரின் அலுவலகத்தில் 4-ற்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினரும் நேற்று பகல் 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் செந்தில் கார்த்திகேயன் அலுவலகம் மற்றும் அரவிந்த் வீடு ஆகிய இடங்களில் 2-வது முறையாகவும், அருண் பிரசாத் மற்றும் கண்ணப்பன் அலுவலகத்தில் முதல் முறையாகவும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here