தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமியை விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளரும்., நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், அக்கட்சியினர் அளித்த புகாரின் பேரில் ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தனது பேச்சு முதலமைச்சரை காயப்படுத்தியதாக கருதினால், மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்திருந்தார். இதனிடையே ஆ.ராசாவுக்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம் அளித்தார். அதில் தனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் கூடுதல் கால அவகாசம் அளிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆ.ராசாவுக்கு தடை விதித்துள்ளது. மேலும் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

வருங்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் எந்த வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவரை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here