புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலானது மன்னர் காலத்து பழமை வாய்ந்த கோயில். புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் முதன்மை கோயிலாகவும் இக்கோயில் திகழ்கிறது.
இந்நிலையில் இந்த கோவிலில் ஆடித்திருவிழா கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில் காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளிருந்தனர்.
தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த தேர் விபத்தில் ஏழு பேர் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் அதே இடத்திலேயே முதலுதவி செய்து பின்னர் வீடு திரும்பினர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை பார்வையிட்டு பின்னர் தேர் விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா ஆகியோர் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தேர் விபத்தான சம்பவம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
தேர் சிறிது தூரம் இழுத்து வந்திருந்து அப்போது தேர் சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆகி இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த கோவிலின் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏதேனும் சாமி குத்தம் இருக்குமா? என பேசப் பட்டு வருகிறது.