சென்னை ராயபுரம் சாந்தி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 2017-ம் ஆண்டு சேலத்தில் பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்று வந்த தமிழரசி என்ற பெண்ணை தாக்கி 8 பவுன் நகை பறித்த வழக்கில் கன்னங்குறிச்சி போலீசாரால் சீனிவாசன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 16-ந்தேதி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கைதி சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார், அவரை சேலத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். புழல் மத்திய சிறை நுழைவாயிலில் வரும்போது சீனிவாசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவருக்கு புழல் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி 4-வது மாடியில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்தனர். அவரது பாதுகாப்புக்காக சிறை போலீஸ்காரர்கள் மாரிமுத்து, மாரிசாமி ஆகியோர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் கைதி சீனிவாசன், நேற்று காலை டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்து வரும்படி கூறியதாக தனது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த 2 போலீஸ்காரர்களிடமும் கூறிவிட்டு ெசன்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள் மாரிமுத்து, மாரிசாமி இருவரும் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்யும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு கைதியை காணவில்லை. மேலும் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர்தான் கைதி சீனிவாசன் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இதுபற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரி புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். இது தொடர்பாக கைதியின் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு இருந்த 2 போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here