சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றார். 

தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து 100 இசைக் கருவிகளால் இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடங்கியது.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி, சதுரங்க கரை பதித்த, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வருகை தந்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பல்வேறு மணற்ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் மணற் ஓவியங்களை வரைந்து சர்வம் படேல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை வண்ணமயமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

காா் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த பிரதமா் மோடிக்கு வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவிருக்கிறார். தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற 8 வகை நடனங்களும் இடம்பெற்றுள்ளன. இசையில் சிறந்த கலைஞர்கள் தங்களது இசையால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here