44 வது சர்வதேச சதுரங்கப்போட்டியானது வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச சதுரங்கப் போட்டி துவக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை துவக்கி வைக்கவுள்ளார்.

இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 4 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும்   5 அடுக்கு பாதுகாப்பில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்து பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமான தளம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 6 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ்பவனுக்குச் சென்று அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நிகழ்ச்சிக்குப் பின் சுமார் 11.30 மணியளவில் மீண்டும் சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து 12 மணியளவில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here