காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் நிறைவாக கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், மதச்சார்பின்மை, சமூக நீதியைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றாகக் கூடியுள்ளோம். பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்ல முடியாமல் எப்போதும் இந்தியா கூட்டணி குறித்தே பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனால் பிரதமர் மோடியே எங்கள் கூட்டணியின் சிறந்த விளம்பரதூதர் என்று கூறினார்.
மேலும், இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது. சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தியாவில் இதுவரை காண முடியாத சர்வாதிகார ஆட்சியை நாம் கண்டு வருகிறோம். மத்திய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்தில் இறங்கியுள்ளோம். பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சிவசேனை (யுபிடி) தலைவர் சஞ்சய் ரௌத், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 26 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.
இந்நிலையில், அக்கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட 28 கட்சிகளைச் சோ்ந்த 63 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.