சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா (எ) சீசிங் ராஜா மீது கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், ஆட்கடத்தல், கொள்ளை என 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவனுக்கு இரண்டு மனைவிகளும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டே ரவுடிசத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிலும் ரவுடி ராஜா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடி ராஜா (எ) சீசிங் ராஜா இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரபல ரவுடிகளான ஆர்காடு சுரேஷ், சதீஷ், படப்பை அட்தி, மார்கெட் சிவா ஆகியோரின் கூட்டாளியான சீசிங் ராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்த நிலையில் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இவர் கூலிப்படை கும்பல் தலைவனாக செயல்பட்டு, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ராஜா பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை தெற்கு கூடுதல் ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில் ஆந்திர எல்லைப் பகுதியில் ரவுடி ராஜா பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் தனிப்படை போலீசார் ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து அங்கிருந்த ரவுடி சீசிங் ராஜாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவிடம் இருந்து ஒரு துப்பாக்கியையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் ரவுடி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here