‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (PMAY) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூ. 2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் தகுதியுடையவா்.
இதில், தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு சேர வேண்டிய பல கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். குறிப்பாக, இந்தத் திட்டத்தில் கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா் (டிவிஏசி) வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் அண்மையில் மட்டும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த மே 20-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூா் கிராமத்தில் வீடுகளைக் கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி ரூ,.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ள பயனாளிகள் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவா்கள் பலரும் லட்சக்கணக்கான ரூபாயை மோசடியாகப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல கடந்த மாா்ச் மாதம் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ. 1 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக 10 அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட முறைகேடு வழக்குதான் மிகப்பெரிய ஊழல் வழக்காக உள்ளது. இதே போன்று பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நடந்த ஊழலின் மொத்தத் தொகை ரூ.2 கோடி என்று ஊழல் தடுப்பு பிரிவு கணித்துள்ளது. இதில் பெரும்பாலும் பஞ்சாயத்து செயலாளா்கள், தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (பிடிஓக்கள்), ஊராட்சி மன்றத் தலைவா்கள் பயனாளிகளாக முன்பதிவு செய்துள்ளதை ஊழல் தடுப்பு பிரிவினா் கண்டறிந்துள்ளனா்.
இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பயனாளிகளில் பெரும்பாலானோா் இந்த திட்டத்தில் பணம் பெறத் தகுதியற்றவா்கள். மேலும் பலா் அதிகாரிகளின் துணையுடன் வீடுகள் முடிக்கப்படாமல் உள்ள போதே பணி முடிந்ததாக போலி ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளனா். இது போன்ற முறைகோடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.