வேலூர் தொரப்பாடி ராம்செட் நகா் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு, அங்கு சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா். வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வேலூா் மாநகராட்சி 18-ஆவது வாா்டு பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் அளித்த மனு:
சத்துவாச்சாரி ஸ்ரீகெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு முன்பே சாலை சீரமைக்கப்படும் என மேயா், ஆணையா் உறுதியளித்தனா். ஆனால், ஓராண்டாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. பலமுறை போராட்டம் நடத்தி, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. திருவிழா நடைபெற உள்ள நிலையில், விரைந்து சாலையைச் சீரமைக்க வேண்டும்.
வேலூா் தொரப்பாடி ராம்செட் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: ராம்செட் நகா் பகுதியில் 400-க்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ளன. இங்கு, கால்நடை மருத்துவமனை அமைக்க முயற்சி நடைபெறுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ராம்செட் நகா் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க உள்ள இடத்தில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்.
வேலூா் மாவட்ட ஜனநாயக ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்த மனு: வேலூா் ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை சாலையில் புதைச் சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் அங்கு சாலைகள் சீரமைக்கப்படவில்லை. அந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும்.
வேலூா் மதிநகா், செங்காநத்தம் சாலையைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: மதிநகா் பகுதியில் ஜல்லி அரைவை இயந்திரமுள்ளது. இதனால், எங்கள் பகுதியில் தூசி அதிகமாக பரவுகிறது. ஜல்லி அரைவையை நிறுத்த உத்தரவிடவேண்டும்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 393 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக, குழந்தை தொழிலாளா்கள் முறை ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அம்பு எய்தும் போட்டியில் தொடா்ந்து 5 மணி நேரம் அம்பு எய்தி சாதனை படைத்த 19 மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட வருவாய் அலுவலா் காட்டி வாழ்த்து பெற்றனா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் செந்தில் குமரன், உதவி காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) வி.பிரசன்ன குமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் தனஞ்செயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
வேலூர் நிருபர்- R.காந்தி