கோவையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிறப்பான தட்பவெட்ப நிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கற்கள், மணல் போன்ற கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கோவையில் செட்டிபாளையம், மலுமச்சம்பட்டி, ஒத்தக்கல் மண்டபம், பிச்சானூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கத்துக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்தோம். போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் போன்ற காரணங்களைக் கூறி பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனவே, பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள காவல் துறை அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து விளக்கம் கேட்டு மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பில் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க மனுதாரர் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மே 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.