வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் வீசியது. சென்னையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தாக்கி 4 பட்டினம்பாக்கம் அருகே 2 பேர் உள்பட 2 பேர் பலியாகினர்.

சைதாப்பேட்டையில் புயலின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். சென்னை, செங்கல்பட்டில் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் கேளம்பாக்கம் அருகே கரையை கடக்க தொடங்கியது.சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரையைக் கடந்துள்ள மாண்டஸ் புயலானது, கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுத்துவிட்டு இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. வட தமிழகத்தில் மேற்கு – தென் மேற்காக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரமாக, மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.வேலூரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு வட கிழக்கில் கிருஷ்ணகிரிக்கு அருகே நகர்ந்து கொண்டிருந்தது. இதனால், அப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இது மேலும் மேற்கு – தென்மேற்காக நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என்றும், அடுத்த 6 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும்-புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் இதுவரை கடந்து இருக்கின்றன.

தற்போது இந்த ‘மாண்டஸ்’ புயலும், சென்னைக்கும்-புதுச்சேரிக்கும் இடையிலான பகுதிகளில் கடந்திருப்பதால், கடந்த 121 ஆண்டுகளில் 13-வது புயலாக இது பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 12 புயல்களில் 2 புயல்கள் அரபிக்கடல் வரை சென்று இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கரையை கடந்த மாண்டஸ் புயலும், அரபிக்கடல் பகுதிக்குதான் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here