சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக் குறையால் மருந்துகள் வாங்க நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்கு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுதவிர, 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர்.இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்காக சர்ஜிக்கல் ஸ்டோர், பிற மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்காக மெடிக்கல் ஸ்டோர் மற்றும் சப்-ஸ்டோர் உள்ளன.
அவற்றை கையாள்வதற்கும், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்கும் 14 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 7 மருந்தாளுநர்களே உள்ளனர்.மருந்தாளுநர்கள் பற்றாக் குறையால் புறநோயாளிகள் பிரிவில் மருந்து, மாத்திரைகள் வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் சிலர் மயக்கமடையும் நிலை உள்ளது.மேலும் மருந்தாளுநர்களும் பணிச் சுமையாலும், விடுப்பு எடுக்க முடியாமலும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து காலியிடங்களில் மருந்தாளுநர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பற்றாக்குறை உள்ளது. அரசு தான் விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.