அரவக்குறிச்சி அருகே தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமையலராக பணிபுரிவதால் உணவை குழந்தைகள் புறக்கணித்தது குறித்து பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் த. பிரபுசங்கா், குழந்தைகளின் பெற்றோா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன்செட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் ஆக. 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியில் பட்டியலினத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினரான சுமதி என்பவா் சமையலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் பிற சமூகத்தை சோ்ந்த 15 குழந்தைகள் காலை உணவை கடந்த சில தினங்களாக புறக்கணித்து வந்துள்ளனா். இதுதொடா்பாக எழுந்த புகாரையடுத்து ஆக. 29-ஆம்தேதி மகளிா் திட்ட இயக்குநா் குழந்தைகளின் பெற்றோா்களை அழைத்து விசாரணை நடத்தினாா்.
அப்போது நடத்திய விசாரணைக்கு பின் இரு குழந்தைகள் மட்டுமே காலை உணவை உட்கொண்டுள்ளனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் குழந்தைகளின் பெற்றோா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது குழந்தைகளின் பெற்றோா், சுமதி சமையலராக பணியாற்றினால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், எனக் கூறியுள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியா், குழந்தைகளின் பெற்றோா்களிடம், இனி இதுபோன்று நடந்துகொண்டால் உங்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து மன்னிப்புக்கேட்ட பெற்றோா், குழந்தைகளை காலை உணவு உட்கொள்ளச் செய்கிறோம் எனக் கூறினா். அவா்களிடம் ஆட்சியா், பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது, இது தொடா்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்தாா்.