சிதம்பரம் அருகே மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவரை கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மஞ்சக்குழி கிராம ஊராட்சியில் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தின்படி, குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீா் வடிகால் அமைக்கும் ஒப்பந்தப் பணியில் ஒரு தனியாா் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
இந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான புவனகிரி வட்டம், பி.முட்லூா் நாகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பி.சந்தோஷிடம் (33) மஞ்சக்குழி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சற்குருநாதன் மழைநீா்வடிகால் பணிகளை செய்தமைக்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இது குறித்து கடந்த 14-ஆம் தேதி கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸில் சந்தோஷ் புகாா் அளித்தாா். ஊழல் தடுப்பு போலீஸாா் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை ஊராட்சி மன்றத் தலைவா் சற்குருநாதனிடம், சந்தோஷ்குமாா் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ந.தேவநாதன் தலைமையிலான போலீஸாா் எஸ்.சற்குருநாதனைக் கைது செய்தனா்.
வீடு, அலுவலகத்தில் சோதனை:
மஞ்சக்குழியில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு போலீஸாா் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநா், தணிக்கை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதுடன், வழக்கு தொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றினா்.