செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1180 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்துள்ளார்.

முழு கொள்ளளவை எட்டிய 24 ஏரிகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும் ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் முழு கொள்ளளவையும், 24 ஏரிகள் 75% கொள்ளளவு எட்டியுள்ளது.

செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு:

செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1180 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் செவ்வாய்க்கிழமை காலை 2675 மில்லியன் கன அடியாக இருந்தது.

ஒரே நாளில் 90 மில்லியன் உயர்ந்து தற்போது 2765 மில்லியனாக உள்ளது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டத்தில் 9.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், செம்பரம்பாக்கம் எரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனூர், குன்றத்துர் திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்துள்ளார். தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here