ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடாவா?!
இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தி.மு.க. கட்சி வேட்பாளருக்கு நம்பத்தக்க தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு, ‘கூகுள் பே’ உள்ளிட்ட ஆன்லைன் பணம் செலுத்தும் முறை மூலம் பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடுகள் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்த தகவலை கேள்விப்பட்டதும், தி.மு.க. வேட்பாளர் உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தார். அந்த அதிகாரி உங்களுக்கு அந்த புகாரை அனுப்பி வைத்திருப்பார் என்று நம்புகிறோம்.
இதை இணையதளம் வழியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை ஆய்வு செய்து முன்கூட்டியே தடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.