ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பாக அருண் பிரகாஷ் தயாரிப்பில், மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில், ஹரிஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “நூடுல்ஸ்”.
ஹரிஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார் – வக்கீல் வசந்த் மாரிமுத்து – அருவி மதன்குமார், ஆகியோர் முக்கிய காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் தம்பதிகள் தன் பெண் குழந்தையுடன் அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை இரவு அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து சத்தம் போட்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடிக்கு சென்று ஹரிஷ் உத்தமனை விசாரிக்கிறார். புகார் இருந்தால் மட்டும் வாங்க…. என சொல்ல… அது வாக்குவாதமாக மாறிவிடுகிறது. பிறகு மறுநாள் காலையில் ஷீலா ராஜ்குமார் தன் மகள் கையில் இருந்த மொபைல் போன் திருட வந்தவரை சட்டையை பிடித்து இழுக்க அவன் வீட்டின் உள்ளே வந்து விழுந்து இறந்து போகிறார்.
இந்நிலையில், ஹரிஷ் உத்தமனை காதல் திருமணம் செய்ததால், இதுவரை தன் வீட்டிற்கு வராத ஷீலா ராஜ்குமார் பெற்றோர் அன்று வெளியூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம் இன்ஸ்பெக்டர் பிரச்சனை, மறுபக்கம் வீட்டிற்குள்ளே பிணம், இந்த பதட்டமான நேரத்தில் பெற்றோர் வருகிறார்கள்….. பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை……
ஹரியின் குடியிருப்புவாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, ஷோபன் மில்லர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.
வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து படபடப்பாக இருக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. படத்தொகுப்பாளர் சரத்குமாரின் பணியும், கலை இயக்குநர் ஆனந்தன் எட்வர்ட் கென்னடியின் பணியும் சிறப்பு.
பாடல்கள், சண்டை காட்சிகள் இல்லையென்றாலும் விறுவிறுப்பு குறையவில்லை என்றே சொல்லலாம். இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி புதிய கதையை எடுத்து ரசிக்க வைத்துவிட்டார்.
ஆனால் வீட்டின் உள்ளே அவர் எப்படி விழுந்து இறந்தார்? என்ற இடத்தில் மட்டும் தெளிவு இல்லை….
மொத்தத்தில் இந்த “நூடுல்ஸ்” ரசித்து ருசிக்கலாம்……