வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.
நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில் செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.
மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக இருப்பதில்லை என சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது எனவும் கூறினார். அதன் பின்னர் நான் அவருடன் நடிக்கவே இல்லை” என கூறியுள்ளார்.