சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல தனியார் கருத்தரிப்பு மைய்யமான ஜஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் கிளை ஈரோடு சத்தி சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கான,மொரிஷியஸ், இலங்கை போன்ற இடங்களில் கிளைகள் உள்ளன. ஈரோடு கிளையில் உள்ள ஸ்கேன் இயந்திரத்திற்கு லைசென்ஸ் இல்லை என்று கடந்த ஆண்டு ஈரோடு ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடாக ஸ்கேன் இயந்திரம் செயல்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட மக்கள்நல்வாழ்வு துறை இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையிலான அதிகாரிகள் இன்று மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆவணங்களை பார்வையிட்டனர்.இதில் புகார் வந்தபோது ஸ்கேன் இயந்திரம் அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்கேன் இயந்திரம் மற்றும் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.மருத்துவமனையின் விளக்கத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோட்டில் இந்த மாதத்தில் 2 தனியார் மருத்துவமனை ஸ்கேன் இயந்திரம் மற்றும் மையத்திற்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.