திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல். 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இதனையடுத்து இவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியும் தரப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது திருப்பத்தூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.சி.வீரமணி திட்டமிட்டே தனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்ததாக குற்றஞ்சாட்டினார்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததால் என் சமுதாய மக்கள் வாக்குகள் குறைந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். என்னவானாலும் கடைசி வரை அ.தி.மு.க-வில் தான் இருப்பேன் எனக் கூறிவந்தார். தலைமையிடம் இருந்து அவருக்கு எந்தப் பதிலும் வந்ததாக தெரியவில்லை.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர், மாவட்டத்தைச் சேர்ந்த நிலோபர் கஃபீல் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.