நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. 
 
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது. ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
 
வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் அனுமதிக்கப்படமாட்டாது.
 
இரவு நேர ஊரடங்கின் போது அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
 
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சேர்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போதுஅனுமதிக்கப்படும்.
 
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
 
பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
 
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
 
இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்குச் செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
 
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
 
அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
 
சோமட்டோ, சுவிக்கி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகிறது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
 
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
 
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.
 
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
 
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
 
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
 
கும்பாபிஷேகம், திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது கும்பாபிஷேகம் நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ கோவில் பணியாளர்கள், கோவில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
 
புதிதாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
 
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத்தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
 
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
 
தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கலாம். இதுபோன்ற விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
 
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முககவசம் அணிவது, சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை தவறாமல் பின்பற்றப்படுவதை திருமண மண்டப நிர்வாகம், தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திருமண மண்டப மற்றும் தியேட்டர் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புதிய கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
 
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைத்துக்கொள்ளவும், ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச் சரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
 
ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய்பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் முககவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுவதையும், வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here