சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர், தனியார் கியாஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், இவருடைய தாய்மாமன் மகளான எர்ணாவூரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

பின்னர் புதுமண தம்பதிகள், தேனிலவுக்காக தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு ஒரு வாரம் சென்றுவிட்டு கடந்த 14-ந்தேதி வீட்டுக்கு திரும்பி வந்தனர். இந்தநிலையில் அதற்கு மறுநாள் 15-ந் தேதி சாமுண்டீஸ்வரி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுண்டீஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சாமுண்டீஸ்வரியின் பெற்றோர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் தற்கொலை என்று வழக்கு முடிவு செய்யப்பட்டது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் விஷம் குடித்த நிலையில் ஜெய்சங்கர் மயங்கி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தண்டையார்பேட்டை அரசு புறநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், ஜெய்சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது முதல் விரக்தியில் இருந்து வந்த ஜெய்சங்கருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

எனினும் மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்தார். இதனால் தனது மனைவி தற்கொலை செய்த 5-வது நாளில் ஜெய்சங்கரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புதுமண தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here