சென்னை:
சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை நேற்று துவங்கியது. ஒரு நாளைக்கு, 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால், பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்து வழங்கப்படுகிறது. பலருக்கு மருந்து தேவைப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு காரணமாக, தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஏப்ரல், 26ம் தேதி முதல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அங்கு, அதிகளவில் கூட்டம் கூடியதால், திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும், கீழ்ப்பாக்கத்தில் கூட்டம் குறைந்தப்பாடில்லை.இதனால், மருந்து விற்பனை, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை, நேற்று துவங்கியது.
நள்ளிரவு முதலே, மருந்து வாங்க மக்கள் திரள துவங்கினர்.ஏற்கெனவே, முன்பதிவு செய்தவர்கள், புதிதாக வந்தவர்கள் என, இரண்டு வரிசைகளில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.காலை, 9:00 மணிக்கு, நான்கு கவுன்டர்களில் துவங்கிய மருந்து விற்பனையில், ஒருவரை, ஒருவர் தள்ளிக்கொண்டு, சமூக இடைவெளி இல்லாமல், மருந்து வாங்க உள்ளே சென்றனர்.அப்போது தினமும், 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால், வரிசையில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து, மருந்து வாங்க வந்தோர் கூறியதாவது:’ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தில்லை. மருந்துக்காக அலைய வேண்டாம்’ என, தமிழக அரசு தெரிவிக்கிறது. பின், எதற்கு டாக்டர்கள், ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வருமாறு சொல்கின்றனர்.
அரசே ஏன் இந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும்?மருந்து விற்பனையை அரசு நிறுத்தி விட்டால், டாக்டர்களும், எங்களை மருந்து வாங்கி வரும்படி சொல்ல மாட்டார்கள். எதற்காக, அரசு பொது மக்களை கஷ்டப்படுத்துகிறது.மருந்து விற்பனையில் திட்டமிடல் இல்லாததால், வாங்க வருபவர்களுக்கும் தொற்று ஏற்படும் நிலை தான் உள்ளது.