நாகையை அடுத்த மேலவாஞ்சூா் பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் அரவிந்த். இவரது மனைவி அபா்ணா(வயது 24). இவர்களது மகன் கவித்திரன்(4). காா்த்திக் அரவிந்த், சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.
 

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த அபா்ணா, நாகை தாமரைக்குளம் மேல்கரையை சோ்ந்த ஆட்டோ டிரைவரான சுரேஷ்(34) என்பவருடன் நாகை காடம்பாடி சூரியா நகரில் குடும்பம் நடத்தி வந்தாா். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி சிறுவன் கவித்திரன் மா்மமான முறையில் இறந்து கிடந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த காா்த்திக் அரவிந்த் தனது மகன் கவித்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இதுதொடர்பாக அபர்ணா, சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
 
விசாரணையில் அபர்ணா, சுரேஷ் இருவரும் தனிமையில் இருந்த போது கவித்திரன் இடையூறு செய்ததால் அவனை அபா்ணா துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், சிறுவன் தானாகவே இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
 
இதையடுத்து போலீசாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அபர்ணா, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் நாகை சிறையில் உள்ளனர்.
 
இந்த நிலையில் சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற அபர்ணா, சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அபர்ணா, சுரேஷ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here