சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (வயது 42). இவர் ‘ஏ பிளஸ்’ ரவுடி ஆவார். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொள்ளை, ஆள் கடத்தல், மாமூல் வசூலித்தல் போன்ற பயங்கர குற்றங்களிலும் ஈடுபட்டு வந்தார். பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த ஆண்டு பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் சிறைக்கு சென்றார். சமீபத்தில் விடுதலையான இவர், புளியந்தோப்பு பகுதியை காலி செய்துவிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்தார். இவரை தீர்த்துக்கட்ட இன்னொரு ரவுடி கும்பல் வெறியுடன் சுற்றி திரிந்தனர். இதனால் ஆற்காடு சுரேஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலையாக இருக்கவில்லை. வேலூர் மாவட்டத்துக்கு திடீரென்று போய்விடுவார்.
ஆற்காடு சுரேஷ் வழக்கு விசாரணைக்காக எழும்பூர் 10-வது கோர்ட்டில் நேற்று மாலை ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் காரில் தனது கூட்டாளி மாதவன் என்பவருடன் புறப்பட்டு சென்றார். அவருடன் வக்கீல் ஒருவரும் பயணித்ததாக தெரிகிறது. ஆற்காடு சுரேஷ் பட்டினப்பாக்கம் பகுதிக்கு மாலை 5.30 மணியளவில் வந்தார். அங்குள்ள பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவர் சாப்பிட சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு இன்னொரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 7 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினார்கள். அவர்கள் திடீரென்று ஆற்காடு சுரேசை சுற்றி வளைத்து வெட்டினார்கள்.
உடன் வந்த அவரது கூட்டாளி மாதவனும் அரிவாளால் வெட்டப்பட்டார். தப்பியோடிய ஆற்காடு சுரேசை விரட்டி சென்று தலையை குறிவைத்து அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் அதே இடத்தில் பிணமானார். மாதவனும் வெட்டுக்காயத்துடன் கீழே சாய்ந்தார். வெறியாட்டம் போட்ட ரவுடி கும்பல் அவர்கள் வந்த காரிலே தப்பி சென்றுவிட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்துவிட்டது.
அந்த பகுதி மிகவும் பரபரப்பு ஆனது. கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயம் அடைந்த மாதவன், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர்களுடன் வந்த வக்கீல் தாக்கப்படவில்லை என்று தெரிகிறது. கொலை வெறியர்கள் ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி மாதவனை மட்டுமே குறி வைத்து வெட்டினார்கள். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.