மனைவியை அனுப்பாததால் வெட்டு!
மண்டியா:
ஹாசன் மாவட்டம், அரக்கல்கோடுவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 50). கடந்த 20 வருடங்களுக்கு முன் சுரேஷ், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள செனகுரளி கிராமத்திற்கு வந்து லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். 7 வருடங்களுக்கு முன் தனது மகள் பல்லவியை, செனகுரளி கிராமத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவரான ரகு என்ற ஜிம்மி(35) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
2 குழந்தைகள் பிறந்த நிலையில் ரகு தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பல்லவி தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த ரகு, பலமுறை மாமனார் சுரேசை சந்தித்து தனது மனைவி பல்லவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், சுரேஷ் தனது மகளை ரகுவுடன் அனுப்பி வைக்க மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று செனகுரளி கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சுரேஷ் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த ரகு கோடரியால் சுரேசை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி அறிந்த பாண்டவபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரகுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.