கடலூர் அருகே  திருமணம் செய்து வைக்காததால் பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தாழங்குடா செந்தாமரை நகரை சேர்ந்தவர் மீனவர் சுப்பிரமணியன்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். இரண்டு மனைவிகளும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது மனைவியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி காலை  தேவனாம்பட்டினத்திலுள்ள தனது முதல் மனைவியின் மகள் இந்துமதியை சந்தித்து நிச்சயதார்த்த செலவுக்காக ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் அன்று மாலையில் சுப்பிரமணியனை காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாழங்குடா கண்டக்காடு ஐயனார் கோவில் அருகே முகத்தில் காயங்களுடன் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வைத்திருந்த  10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை.இதுகுறித்து தகவலறிந்த கடலூர் டி.எஸ்.பி.சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் காதல் தகராறில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் சுத்துகுளத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் குகன் மற்றும் முருகன் மகன் ராஜசேகர் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களில் ராஜசேகர் சுப்பிரமணியன் மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அதனால் அவர் சுப்பிரமணியனிடம் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக 22ஆம் தேதி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே வருமாறு அழைத்துள்ளார். அதையடுத்து சுப்பிரமணியமும் அங்கு சென்றுள்ளார். குகனும் ராஜசேகரும் காரில் சென்று சுப்பிரமணியனை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது ராஜசேகர் சுப்பிரமணியனிடம் அவரது பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாகவும், இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்தாகவும், அதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் குகனுடன் சேர்ந்து சுப்பிரமணியனின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here