தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 2 கல்வி ஆண்டுபடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம்  கொரோனா பாதிப்பு தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டன. 12-ம் வகுப்பை தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2019-2020 கல்வி ஆண்டு இறுதியில் தேர்வுகள் நடைபெறும் காலத்தில் தொற்று பரவியதால் அரசு இந்த முடிவை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து 2020-2021 கல்வி ஆண்டிலும்  கொரோனா வின் தாக்கம் நீடித்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. என்றாலும்  கொரோனா  தீவிரம் அடைந்ததால் அடுத்த சில நாட்களில் மூடப்பட்டன. மார்ச், ஏப்ரல் மாதங்களில்  கொரோனா வின் 2-வது அலை தாக்க தொடங்கியது. மே மாதத்தில் இது உச்சத்தை அடைந்தது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த முயற்சித்த போதிலும் முடியாமல் போனது. அரசு பொதுத்தேர்வு  எழுதக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2021-2022 கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. ஆனாலும்  கொரோனா  தொற்றின் பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் பள்ளி- கல்லூரிகள் மட்டும் மாணவர்கள் நலன் கருதி இன்னும் திறக்கப்படவில்லை.

ஆனாலும் இந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் வீடுகளில் இருந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகிறார்கள்.

புதிய கல்வி ஆண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வி கற்றல் திறன் பாதிக்கப்படாத வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 1-ந்தேதி வரை நடத்த அனுமதி இருந்த போதிலும் இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரையில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை சேர்க்க இன்னும் ஒரு மாதம் காலம் அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக் கும் சூழ்நிலை இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனாலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, மதிப்பெண் பதிவு செய்தல், பாடப் புத்தகங்கள் வழங்குதல் போன்ற பணிகளை தொடர்ந்து விரைவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளின் வழக்கமான செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் அந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்  கொரோனா வின் 3-வது அலை தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் அதனை எதிர்கொள்ளவும் கல்வித்துறை தயாராகி வருகிறது.

கடந்த காலங்களைப் போல அல்லாமல் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் கல்வி கற்றலை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான முயற்சிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

வரும் காலங்களில் தொற்றின் தாக்கத்தால் மாணவர்கள் தேர்வு பாதிக்கப்படாத வகையில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களை இப்போதே தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அனைத்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

வருகின்ற பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இந்த அலகு தேர்வு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்தின் இறுதி வாரத்தில் இந்த அலகு தேர்வை நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதற்கான பாட திட்டங்களை நடத்தி அதில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு இந்த தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அலகு தேர்வு நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட இந்த மதிப்பெண்களை வைத்து கணக்கிட்டு தேர்வு முடிவை அறிவிக்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here