முஸ்லிம்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் 10-ஆம் நாளை மொஹரம் நாளாக இஸ்லாமியர்கள் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடும் இத்திருவிழாவினை, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராம விழாவாக மொஹரம் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
சாதி, மத, பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக இந்துக்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு மொஹரம் பண்டிகைக்கு தயாராவது வழக்கம்.
மொஹரம் பண்டிகை அன்று முஸ்லிம்கள் பஞ்சா எனப்படும் கரகத்தை அப்பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்கின்றனர், ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வேண்டுதல் நிறைவேற கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத்துணிகள் சாத்தி வேண்டிக் கொள்கின்றனர்.
பின்னர் இஸ்லாமிய ஆலயத்திற்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி, தீமிதித்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திருவிழாவினை அங்குள்ள இந்துக்களுடன் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இன்றும் கொண்டாடி வருகின்றனர்.