புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே பொருளாதார மந்த நிலை ஏற்படத்தொடங்கியது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதமாக (மைனஸ் 23.9) குறைந்துள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான ஜிடிபி வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் பங்குத்தொகையின் பெரும் பகுதியை (சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்) பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இன்னும் வழங்காமல் உள்ளது.
ஜிஎஸ்டி பங்குத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி இன்று தனடு டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜிடிபி வீழ்ச்சி, ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை ராகுல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோ செய்தியில் கூறியதாவது:-
வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சிக்கு மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையே (கபீர் சிங் வரி என விமர்சனம்) மிக முக்கிய காரணம். லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் பலர் இந்த வரி முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை அமைப்பு சாரா தொழில்துறை மீது நடத்தப்பட்ட 2-வது மிகப்பெரிய தாக்குதல். ஜிஎஸ்டி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டம் ஆகும்.
ஒரே வரி என்று வரி தொடர்பான அமைப்பை சுலமாக்க கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் பாஜக தலைமையினான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி முறை முற்றிலும் மாறுபட்டது.
இதில் 4 வகையான வரி விதிப்பு அடுக்குகள் உள்ளது. இதில் உச்சபட்சமாக 28 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.  இது மிகவும் கடினமான ஒன்று. சிறு நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி தொகையை செலுத்தவே முடியாது. இந்த 4 அடுக்கு வரி விதிப்பு முறை நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபர்களுக்குத்தான் சாதகமானதாக உள்ளது.
பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி முறை மாநில அரசுகளை மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி தொகையை பெறும் நிலையில் வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி பங்குத்தொகையை கொடுக்க முடியவில்லை.
இந்த வகை ஜிஎஸ்டி முறை ஒரு தோல்வியாகும். இது ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு ஆகியவை அமைப்பு சாரா தொழில்த்துறை மீது மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here