பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்
 
புதுடெல்லி:
 
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார். 
 
அதேபோல், 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி அசாம் மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
 
அசாமின் போகாஹாட் மற்றும் மேற்கு வங்காளத்தின் பாங்குராவில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி அசாம், மேற்குவங்காள மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here