தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மளிகை மற்றும் காய்கறி-பழ கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நலன்கருதி தமிழகம் முழுவதும் நடமாடும் காய்கறி-பழ வாகன சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னைக்குட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் நடமாடும் காய்கறி-பழங்கள் விற்பனை வாகன சேவையை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று தொடங்கி வைத்தார். சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நகரின் குடியிருப்பு பகுதிகள் நோக்கி இந்த வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களும் சமூக இடைவெளி கடைப்பிடித்து இந்த வாகனங்களில் தேவையான காய்கறியை வாங்கி செல்கிறார்கள்.
நடமாடும் வாகனங்களில் (கிலோவில்) வெங்காயம் ரூ.30, தக்காளி-ரூ.15, உருளைகிழங்கு-ரூ.30, கத்தரி-ரூ.22, கேரட்-ரூ.26, சுரைக்காய்-ரூ.18, பீன்ஸ்-ரூ.22, பச்சை மிளகாய்-ரூ.26, இஞ்சி-ரூ.46, முருங்கை-ரூ.38, எலுமிச்சை-ரூ.90, வெண்டை-ரூ.16, பீட்ரூட்-ரூ.18, வாழைக்காய் (ஒன்று)-ரூ.8, புதினா, மல்லி – ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற அளவில் விற்பனை நடக்கிறது.
அரசு அறிவித்துள்ளது போல, தனியார் சார்பிலும் அரசு அனுமதியுடன் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் நலனுக்காக நடமாடும் காய்கறி வாகன சேவையை தொடக்கி வைத்த அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேவேளை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்திருப்பதை எண்ணி உரிய நிவாரண உதவிகள் அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல்காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.