சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “சென்னையில் மூன்று நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் 11,800 பேர் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
100க்கு 100 தடுப்பூசி செலுத்திக்கொண்டோம் என்ற நிலையை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும். நீராவி முறையை பொது இடங்களில் செய்ய வேண்டாம்; இதனால் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீராவி பிடிப்பதால் ஒருவருக்கு இருக்கும் தொற்று மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது.
வீடுகளில் மட்டுமே நீராவிப் பிடிக்கும் முறையைக் கடைப்பிடிக்கலாம். பொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.