சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி, டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது எனக் கூறி இருந்தார். இவரது கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் உருவெடுத்து வருகிறது.

அமைச்சர் உதயநிதியின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்திருந்தார். சனாதனம் மீதான விமர்சனத்தை வழக்குப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரிவர்த்தனை யாத்திரையை துவக்கி வைத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறும்போது:

‘இதற்கான வியூகம்தான் மும்பையில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் அமைக்கப்பட்டதா? சனாதனத்தை ஒழிக்கத்தான் வியூகமா? இந்த வியூகம்தானா அரக்கத்தனமான கூட்டணியில் அமைந்தது? சனாதனத்தை ஒழிக்கவே வரவிருக்கும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுகின்றனவா? இதுபோல், சனாதனத்தை ஒழித்து மதவெறுப்பை ஏற்படுத்தும் கட்சிகளுக்காகவா நான் வாக்களிக்க வேண்டும்?’ எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியின் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது இன்னும் வழக்குகள் பதிவாகவில்லை. பிஹாரின் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் தமிழக அமைச்சர் உதயநிதி மீது வழக்கு தொடுக்க மனு அளித்துள்ளார். இம் மனுவின் விசாரணை வரும் 14 -ல் நடைபெற உள்ளது. இதனிடையே, காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம், அமைச்சர் உதயநிதியின் கருத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் மீது கேள்வி எழுப்புகையில், ‘இப்பிரச்சினையில் நான் உதயநிதியை கண்டிக்க விரும்பவில்லை. ஏனெனில், இதை கூறியதன் மூலம் தான் யார் என்பதை அவரே தெளிவாக்கி விட்டார். திமுகவுடன் தன் கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொள்ளவில்லை எனில்அக்கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்பதாகி விடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிஹார் பாஜகவின் மாநிலத் தலைவரான சம்ரத் சவுத்ரி, ‘ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இப்பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன்? இவர்களுடன் காங்கிரஸும் உதயநிதியின் கருத்தை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார். இம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட உதயநிதியை கண்டித்து கருத்து கூறி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான அனுராக் தாக்குர், ’இதன்மூலம் மதநல்லிணக்கத்தை குலைத்து, தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கப்படுகிறது. இதற்காக, உதயநிதி இந்நாட்டின் முன்பு மன்னிப்பு கோர வேண்டும்.’ என வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.சி.வேணுகோபால் கூறும்போது, ‘அனைத்து மதங்களையும் மதிப்பது அவசியம். ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் காங்கிரஸ் மதிக்கிறது. சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு’ எனக் கூறியுள்ளார்.

எனினும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங், “இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் அமைதி காப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இண்டியா கூட்டணிக் கட்சிகள் சனாதனம் மீதான விமர்சனத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இல்லை எனில் அவர்களை இந்த நாடு மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பாஜகவுக்கு, எதிர்க்கட்சியான திமுகவே சனாதனம் பேசி அரசியல் ஆயுதத்தை எடுத்து கொடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்த இந்து அமைப்புகள் முயற்சிக்க கூடும் எனக் கூறப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here