சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு தான் திமுகவில் இணைந்து அமைச்சரானார்.
இந்நிலையில் தான் 2011-2014 காலக்கட்டத்தில் போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜி சிக்கினார். இந்த புகாரில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்பட மேலும் சிலர் மீது சிசிபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பிறகு வேலை வழங்காதவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட தகவலை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கடந்த 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அமலாக்கத்துறையின் காவலில் தனியார் மருத்துவமனையில் உள்ள நிலையில் நாளை அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது அமலாக்கத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. கைது பற்றி முறையான தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான நோட்டீஸ் வழங்காமல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் துன்புறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பரிசீலனை செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்னும் 6 வாரங்களுக்குள் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.