சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது சரிதான் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு காவலில் எடுத்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவு 9 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார்.
மூன்றாவது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தனி அறையில் செந்தில் பாலாஜி விசாரணைக்காக வைக்கப்பட்டார். இரவு 10 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்பட்டது. நேற்றிரவு விசாரணை நடத்தப்படாமல் ஓய்வளிக்கப்பட்டதால், அமைச்சர் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை 7 மணியளவில் அரசு மருத்துவர்கள் குழு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதித்தது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்களின் அடிப்படையில் கேள்விகளை கேட்டு அவரது தரப்பு பதிலை அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 150 கேள்விகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலை 10.30 மணியளவில் அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தசாரியாவும் விசாரணையில் இணைந்து கொண்டார்.
அமலாக்கத்துறை விசாரணையையொட்டி, சாஸ்திரிபவன் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாஸ்திரி பவனுக்கு வரும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக புழல் சிறையில் நேற்று காலையில் வழக்கம் போல் அனைவருடனும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிக்கொண்டிருந்தார்.
உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த தகவல் தெரிந்ததை அடுத்து, சோகமாக இறுக்கமான முகத்துடன் காணப்பட்டுள்ளார்.
மதிய உணவாக சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை நேரத்தில் சிறையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அமலாக்கத்துறை காவலையடுத்து அவருக்கு தேவையான உடைகள் அனைத்தும் அவருடைய வீட்டில் இருந்து நேற்று சிறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அவரது தரப்பு வழக்கறிஞர் பரணி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், செந்தில் பாலாஜியை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால், செந்தில் பாலாஜிக்காக வாங்கி வந்த சோப்பு, சீப்பு, பிரஷ், பேஸ்ட் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பரணி ஒப்படைத்துவிட்டு சென்றார்.