கோவை:
கல்வி உதவித் தொகைத் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் குறித்த தகவல்களை ஒரு கும்பல் திரட்டி உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு அவர்கள் போன் செய்து அரசு சார்பில் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு போன் செய்த அவர்கள் இந்த கல்வி உதவித் தொகையை பெற 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கான க்யூ ஆர் ஸ்கேன் கோடு வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர். இதை நம்பிய பெற்றோர் அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு 2000 ரூபாய் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய ஒரு சில நாள்களில் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்பட்டு இருந்த மொத்த தொகையும் மர்ம நபர்களால் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 10 பேரிடம் புகார் பெற்றுள்ளதும் இவர்களது வங்கிக் கணக்கில் சில லட்ச ரூபாய் மட்டுமே மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் இந்த மோசடி கும்பல் 500க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 7 ஏடிஎம் கார்டுகள், 22 சிம் கார்டுகள், 44 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.