சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பி-பிளாக் பகுதியில் இரவு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 ஆட்டோகள், 2 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என சுமார் 20 வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இளைஞர்கள் மூவர் மது போதையில் கையில் கத்தியுடன் ஒவ்வொரு வாகனத்தையும் அடித்து உடைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, வாகனங்களை உடைத்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை கொடுங்கையூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த விஜய் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் ஆகியோர் மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சூழலில் முல்லை நகர் சுடுகாடு அருகே கொடுங்கையூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த விஜய் மற்றும் லாரன்ஸ், காவலரை பார்த்ததும் வந்த வழியிலேயே முல்லை நகர் மேம்பாலம் நோக்கி ஓடினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினர். அப்போது இருவரும் முல்லை நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் இருவருக்கும் கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்ட கொடுங்கையூர் காவல்நிலையத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இளைஞர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர்கள் மாவு கட்டு போட்டனர். இதனையடுத்து கொடுங்கையூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.