தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 06.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (பார்கள்) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.