கார் மோதி பலி
சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிரோஷா (வயது 34). இவருடைய மகன் விஜய் (11). இவன், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் தனது உறவினரான மோனிகா (26) என்ற பெண்ணுக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.
அப்போது மோனிகா, காரை வேகமாக பின்னோக்கி இயக்கும்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விஜய் மீது கார் ஏறி இறங்கியது. கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காரை அடித்து நொறுக்கினர்
இது குறித்து தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அஜய் மற்றும் மோனிகா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினார்கள். மோனிகாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்த அவர், காரை ஓட்டி பழகும்போதுதான் எதிர்பாராதவிதமாக பின்னோக்கி இயக்கியதில் கார் மோதி சிறுவன் பலியானது தெரிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.