‘சலுகை கட்டணத்தில், மாலத்தீவு அழைத்துச் செல்வதாக, ஆன்லைன் வாயிலாக பண மோசடி நடக்கிறது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாநில சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
சைபர் கிரைம் குற்றவாளிகள், தற்போது, ‘வாட்ஸ் ஆப்’ செயலியில், மாலத்தீவு குறித்து, விதவிதமான அழகிய படங்கள் மற்றும் ‘வீடியோ’க்களை அனுப்புகின்றனர்.சிறப்பு சலுகை என்பதால், விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குவது, உணவு, மது வகைகள் எல்லாவற்றுக்கும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என, சில இணையதள முகவரியை அனுப்புகின்றனர். அதற்குள் சென்றால், பெயர், முகவரி, தொடர்பு எண், உறவினர் குறித்த விபரங்கள் எல்லாம் கேட்கின்றனர். சிறப்பு சலுகை கட்டணம் குறித்த விபரங்களை அனுப்புகின்றனர்.ஒரு லட்சம் ரூபாய்க்கான திட்டம் என்றால், முன் பணமாக, ‘ஆன்லைன்’ வாயிலாக, 10 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பின், பயண திட்டம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல் அனுப்புவர். பின், பண மோசடி செய்துவிடுவர்.
இணையதளம் வாயிலாக கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.இந்த மோசடி தொடர்பாக, தற்போது புகார்கள் வருகின்றன. சைபர் கிரைம் மோசடி கும்பல், உ.பி., மற்றும் புதுடில்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களை தேடி வருகிறோம். பொதுமக்கள், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.