தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர் ‘சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் 2,083 வாக்குப்பதிவு இடங்களும், 11872 வாக்குச்சாவடி மையங்களும், 792 மொபைல் பார்ட்டிகளும் அமைந்துள்ளதாக தெரிவித்தார். அவற்றுள் 327 பதட்டமான வாக்குப்பதிவு இடங்களில் 1,349 வாக்குச்சாவடி மையங்களும், 10 மிகவும் பதற்றமான இடங்களில் 30 வாக்குச்சாவடி மையங்களும் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒரு காவலர் மற்றும் சிறப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், மொபைல் பார்ட்டிகளில் துப்பாக்கியுடன் கூடிய உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதமேந்திய காவலர்கள் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
சென்னையில் 30,000 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவற்றில் சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், மத்திய காவல் படையினர், சிறப்பு காவல் படையினர், சென்னை ஊர்க்காவல் படையினர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்காவல்படையினர், ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் ராணுவத்தினர் இருப்பார்கள் என தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் அரசியல் கட்சி சார்ந்த அலுவலகமும் வாக்கு சேகரிப்பு கூடாது எனவும் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் வரை எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகள் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அவருக்கு தேர்தல் நடத்த உதவியாக காவலர்கள் இருப்பார்கள் எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
வேட்பாளர் வாக்களிக்க வரும்போது அவர் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார் எனவும் அவருடன் வரும் பிற நபர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார். 044- 23452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்தும், தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்தும், பணம் பட்டுவாடா குறித்தும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் இந்த எண்ணானது இன்று இரவிலிருந்து 24 மணி நேரமும் செயலில் இருக்குமெனவும் தெரிவித்தார்.
அரசியல் பணிகளுக்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்திருக்கும் கட்சி சார்ந்த நபர்கள் இன்று இரவு 7 மணியில் இருந்து சென்னையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் மீறி அவர்கள் கட்சி சார்பான பணிகள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை வாகன தணிக்கையில் ரூ.44.11 கோடி பணம், சுமார் 50 கிலோ தங்க நகை, 119 கிலோ வெள்ளி பொருட்கள், 2889 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் 371 வழக்குகள், தேர்தலுக்கு முந்தைய நாட்கள்(தற்போது வரை) சம்பவங்கள் தொடர்பாக 18 வழக்குகள், பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியதாக 605 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளதாகவும் அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.