தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், அரசு பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

13-ந் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெரினா செல்ல தடை:
 
இந்தநிலையில் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11-ந் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.
 
இரவு 10 மணி வரை அனுமதி:
 
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப் படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
 
கூடுதல் காட்சிக்கு அனுமதி:
 
புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது.அனைத்து காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here