டெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றால் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 83,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,30,236 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேர் இறந்த நிலையில்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 38,59,399- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 9,90,061 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா, பீகார், ஒடிசா, அசாம், குஜராத், கேரளா, ராஜஸ்தான், ஆகிய 13 மாநிலங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால் செப்.25-ம் தேதி முதல் 46 நாட்களுக்கு மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கவும், திட்ட கமிஷனுடன் இணைந்து மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது.
அதில் செப்.25-ம் தேதி நள்ளிரவு முதல் 46 நாட்களுக்கு கண்டிப்பாக நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசிய விநியோக சங்கிலியை பராமரித்தல் குறித்து திட்டமிடல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த தகவல் தவறானது என கூறியுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அத்தகைய பரிந்துரை எதையும் செய்யவில்லை எனவும் மறுத்துள்ளது. இதேபோல மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தக்கோரி எந்த பரிந்துரையும் வரவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே உலகில் உள்ள அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான Serum Institute of India -வின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
35 தடுப்பூசிகள் பரிசோதனையில் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்; மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை என்றும், இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.